மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா; சாதகங்கள், பாதகங்கள் என்னென்ன?

 மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா; சாதகங்கள், பாதகங்கள் என்னென்ன?

மக்கள் தொகையில் விரைவில் சீனாவை இந்தியா முந்தவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் நெருக்கடி போக, இதனால் ஏற்படக்கூடிய வேறு தாக்கங்கள் என்ன?


2023ஆம் ஆண்டின் மத்தியில் உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதவாக்கில் சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாக இருக்கும்போது இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடியாக இருக்கும். அந்தத் தருணத்தில் சீனாவைவிட இந்தியாவில் 29 லட்சம் பேர் அதிகம் இருப்பார்கள்.

34 கோடியுடன் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தில் அமெரிக்கா இருக்கும். 70 ஆண்டுகளுக்கு உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியினர் ஆசிய நாடுகளில்தான் இருப்பார்கள்.

இந்திய மக்கள் தொகை இந்த அளவுக்கு அதிகரிக்கும் எனச் சொல்லப்படுவது ஒரு உத்தேசமான கணிப்புதான். காரணம், கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

இந்தியாவில் கடந்த 140 ஆண்டுகளாக ஒவ்வொரு பத்தாண்டிற்கும் இடையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவந்தது. 2021ல் இருந்த கோவிட் பரவல் காரணமாக இது 2022ஆம் ஆண்டிற்கு தள்ளிப்போடப்பட்டது. தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2024ல் நடக்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நாவின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு நவம்பரில் உலக மக்கள் தொகை 800 கோடியைத் தாண்டியது. ஆனால், வளர்ச்சி விகிதம் என்பது முன்பிருந்ததைப் போல அதிகமாக இல்லை என்பதோடு, 1950களில் இருந்த அளவுக்கு குறைவாகவும் இருக்கிறது.

இந்தியாவிலும் சீனாவிலும் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனாலும், அதன் வளர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. சீனாவில் அமலில் இருந்த ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற கொள்கை 2016லேயே கைவிடப்பட்டுவிட்டது என்றாலும், அடுத்த ஆண்டு முதல் சீனாவின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பது, பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்வது ஆகியவை சீனாவின் மக்கள் தொகை குறைவதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில், 1950ல் ஒரு பெண்ணுக்கு 5.7 குழந்தை பிறக்கும் என்ற நிலை இருந்தது. அது தற்போது ஒரு பெண்ணுக்கு 2.2 குழந்தை என்ற விகிதத்திற்குக் குறைந்துள்ளது.

இந்தியா சுதந்திரமடைந்தபோது, வேகமாக அதிகரித்துவந்த மக்கள் தொகை நாட்டின் மிகப் பெரிய கவலைகளில் ஒன்றாக இருந்தது. 70களில் இந்தக் கவலை உச்சத்தைத் தொட்டு, மிக பெரிய அளவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டுப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தியா உலகில் அதிக மக்கள் வசிக்கும் நாடாக மாறிய பின் என்ன நடக்கும்?

இந்தியா உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக மாறிய பிறகு, மக்கள் தொகையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கும். உலகம் தோன்றியதிலிருந்து அதிக மக்கள் வசித்த ஒரு நாடாக இந்தியா உருவெடுக்கும்.

சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்தபோது, அதன் மனித வளத்தைச் சிறப்பாக பயன்படுத்திய சீனா, உலகின் மிகவும் வளர்ந்த பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்தது. மக்கள் தொகை அதிகரிப்பு தொடர்பான அச்சத்தை இந்தியாவும் சீனாவும் ஒரே காலத்தில் எதிர்கொண்டன. ஆனால், சீனாவில் மக்கள் தொகை வீழ்ச்சியென்பது மிகப் பெரிய அளவில் ஏற்பட ஆரம்பித்தது. இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் தொகை வீழ்ச்சி மிக மெதுவாகவே நடந்துவருகிறது. இதனால், இந்தியாவில் இளம் வயதினர் எண்ணிக்கை தொடர்ந்து நல்ல நிலையிலேயே இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால், சீனாவின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் சற்று குறைவானவர்களே 50 வயதுக்குட்பட்டவர்கள்.

மக்கள் தொகை அதிகரிப்பு என்பது மிகப் பெரிய பிரச்சனையாக பார்க்கப்பட்ட காலம் உலகம் முழுவதும் மாறியிருக்கிறது. இப்போது இது தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. உலகம் முழுவதுமே, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி என்பது கிட்டத்தட்ட நின்றுபோயிருக்கும் நிலையில், மக்கள் தொகை வளர்ச்சி அடையும் நாடுகளைப் பொறுத்தவரை பெரிய சாதகம் இருப்பதாகக் கருதுகின்றன. வேலை செய்யக்கூடிய ஆட்கள் இந்த வளரும் நாடுகளில் இருந்து கிடைப்பார்கள் எனக் கருதுகின்றனர்.

ஆனால், இந்தியாவிற்குள் இதுபற்றி மாறுபாடான பார்வை இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் மக்கள் தொகை வளர்ச்சி வேகமாக இருந்ததோடு, உணவுப் பற்றாக்குறையும் இருந்தது. இந்த இரண்டு பெரும் பிரச்சனைகளையும் அரசு சமாளிக்க வேண்டியிருந்தது. ஒரு பக்கம் மிக தீவிரமான மக்கள் தொகை கட்டுப்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மற்றொரு பக்கம் பசுமைப் புரட்சி போன்ற உணவு உற்பத்தி முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த இரண்டு முயற்சிகளுமே சிறப்பாக பலனளித்திருக்கின்றன.


மக்கள் தொகை அதிகரிப்பால் இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் என்ன?

மக்கள் தொகை வளர்ச்சி தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான போக்கை தனது South Vs North: India's Great Divide நூலில் குறிப்பிடுகிறார் அந்த புத்தகத்தின் ஆசிரியரான ஆர்.எஸ். நீலகண்டன். அதாவது, கெடுபிடிப் போர் காலகட்டத்தில் கம்யூனிசத்திற்கு எதிரான தங்கள் யுத்தத்தின் ஒரு பகுதியாக மக்கள் தொகை கட்டுப்பாட்டை அமெரிக்கா முன்வைத்தது. ஏழை நாடுகளில் மக்கள் தொகை அதிகரித்தால் அது கம்யூனிசப் புரட்சியை ஏற்படுத்தும் என அமெரிக்கா கருதியது. இதனால் தெற்காசியா நாடுகளை மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும்படி அமெரிக்கா வலியுறுத்தியது என்கிறார் அவர்.

"இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு என்பது கண்டிப்பாக ஒரு சிக்கல்தான். இந்தியா மக்கள் தொகை அதிகரிப்பை எதிர்கொண்ட விதமும் சீனா எதிர்கொண்ட விதமும் வெவ்வேறானவை. 1991ல் இந்தியாவின் தனிநபர் வருவாயும் சீனாவின் தனி நபர் வருவாயும் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தது அல்லது இந்தியாவில் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது சீனாவில் தனிநபர் வருவாய் இந்தியாவின் தனிநபர் வருவாயைப் போல ஐந்து மடங்கு அதிகம். இதற்கு காரணம், அங்கு ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி.

இரு நாடுகளிலும் மக்கள் தொகை வளர்ந்தது என்றாலும், நம்மால் சீனா அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை அடைய முடியவில்லை. 2004க்கும் 2014க்கும் இடையில் உயர் பொருளாதார வளர்ச்சி இருந்தபோதே இதுதான் நிலைமை. இப்போது வளர்ச்சி மிகக் குறைவாக இருக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சிக்கு இணையாக பொருளாதார வளர்ச்சி இருக்க வேண்டுமென்றால் அது 10 சதவீதம் அளவுக்கு வளர வேண்டும். சீனாவில் 2000 முதல் 2014வரை அந்த அளவுக்கு வளர்ச்சி இருந்தது. ஆனால், இந்தியாவில் இப்போது அப்படி வளர்ச்சியில்லை. ஆகவே, மேலும் பலர் ஏழ்மைக்குள்தான் தள்ளப்படுவார்கள்" என்கிறார் புள்ளியியல் நிபுணரும் South VS North நூலின் ஆசிரியருமான ஆர்.எஸ். நீலகண்டன்.

இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் தொகைக் கட்டுப்பாடு 1970களில் ஒரு தேசியக் கொள்கையாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதனைச் செயல்படுத்தும் பொறுப்பு மாநிலங்களிடம் விடப்பட்டது. எல்லாக் கொள்கைகளையும் போலவே இந்தக் கொள்கையும் இந்தியா முழுவதும் ஏற்றத்தாழ்வுடன் அமலாக்கப்பட்டது.

இதனால் சில மாநிலங்களில் அதீதமான மக்கள் தொகை பெருக்கமும் சில மாநிலங்களில் மிகக் குறைவான அதிகரிப்பும் இருந்தது. உதாரணமாக, இந்தியாவில் 1971க்கும் 2011க்கும் மத்தியில் ராஜஸ்தானில் 166 சதவீத அதிகரிப்பும் உத்தரப்பிரதேத்தில் 138 சதவீத அதிகரிப்பும் இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75 சதவீதமும் கேரளாவில் வெறும் 56 சதவீதமும்தான் அதிகரித்தது. அதாவது ராஜஸ்தானில் 1971ல் 2.57 கோடியாக இருந்த மக்கள் தொகை 2011ல் 6.86 கோடியாக உயர்ந்தது. கங்கைச் சமவெளி மாநிலங்கள் முழுக்கவே இந்த நாற்பதாண்டுகளில் மக்கள் தொகை பெருக்கம் இரு மடங்கிற்கும் அதிகமாக இருந்தது.

ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தை என்ற விகிதம் வந்துவிட்டால் மக்கள் தொகை நிலைபெற ஆரம்பித்துவிட்டதாக அர்த்தம். இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த நிலை வந்துவிட்டது. ஆனால், பிஹார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கருவுறும் விகிதம் இரு மடங்காக இருக்கிறது. பிஹாரில் 3.2ஆகவும் உத்தரப்பிரதேசத்தில் 3 ஆகவும் இது இருக்கிறது. இது இந்தியாவில் புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

"அதீத மக்கள் தொகை வளர்ச்சி உள்ள பகுதி மற்றும் மக்கள் தொகை வளராமல் நிலைபெற்றுவிட்ட பகுதி ஆகிய இரண்டு பகுதிகளுமே ஒரே நாட்டில் இருப்பது பெரிய பிரச்சனைதான். மக்கள் தொகையைக் குறைத்த பகுதியினர் அதன் பலனை அடைய நினைப்பார்கள். ஆனால், அவர்களால் அதன் பலனை அடையவே முடியாது. கூடுதலாக வரி பகிர்வு, பிற மாநிலத்தினர் வருகை போன்றவை இதில் சிக்கலை ஏற்படுத்தும். முடிவில் இரு தரப்பு மக்களுக்கும் இடையிலான மோதலில்தான் போய் முடியும்" என்கிறார் அவர்.

2019ஆம் ஆண்டில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை, 2018-19ஆம் ஆண்டின் எகனாமிக் சர்வே ஆகியவற்றில் இருந்த புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவிலேயே மக்கள் தொகை குறைவது முதலில் தமிழ்நாட்டில்தான் நடக்கும் எனத் தெரியவருகிறது. 2031-41ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி - 0.1ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

நீண்ட நாட்களாகவே தமிழ்நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி குறைவதன் அபாயம் குறித்துப் பேசிவரும் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன், மக்கள் தொகை வளர்ச்சி நாட்டின் இரு பகுதிகளிலும் வெவ்வேறு பிரச்சனைகளைக் கொண்டுவரும் என்கிறார்.

"பிரதமர் மக்கள் தொகை அதிகரிப்பின் பலன்கள் குறித்துப் பேசுகிறார். மக்கள் தொகை அதிகரிப்பதன் மூலம் பலன் கிடைக்க வேண்டுமென்றால், அந்த மக்கள் படித்தவர்களாக இருக்க வேண்டும். திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் அப்படியில்லை. ஆகவே, இது மிகப் பெரிய ஏற்றத்தாழ்வைத்தான் கொண்டுவரப் போகிறது. தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துகொண்டே போகிறது. கேரளாவில் பல பள்ளிகளை மூடுகிறார்கள். தமிழ்நாட்டில் சராசரி வயது 35 என ஆகிவிட்டது. ஆனால், வட மாநிலங்களில் தொடர்ந்து மக்கள் தொகை அதிகரிக்கிறது.


சீனாவோடு நாம் இப்போது பொருளாதார ரீதியில் போட்டியிடவே முடியாது. சீனப் பொருளாதாரத்தின் அளவு 17 ட்ரில்லியன். நாம் ஐந்து ட்ரில்லியனைத் தொடவே போராடிக்கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக நாம் சீனாவைவிட அதிக அளவில் வளர வேண்டும். அப்போதுதான் பத்தாண்டுகளிலாவது அவர்களை எட்டிப்பிடிக்க முடியும். ஆனால், அப்படி நடப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.

மேலும், 2026ல் தொகுதி மறுசீரமைப்பிலும் இது பெரிய பிரச்சனைகளை உருவாக்கப்போகிறது" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

தொகுதி மறுசீரமைப்புப் பிரச்சனை

இந்தியா சுதந்திரமடைந்த ஒவ்வொரு பத்தாண்டிற்கும் நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை திருத்தப்பட்டது. 1952ல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி இந்தியாவில் 494 தொகுதிகள் இருந்தன. இதற்குப் பிறகு, 1962ல் தொகுதிகளின் எண்ணிக்கை 522ஆக உயர்த்தப்பட்டது. 1973 இந்த எண்ணிக்கை 543ஆக உயர்த்தப்பட்டது.

1975ல் இந்தியாவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போதுதான் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. அந்தத் தருணத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுவருவதால், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என இந்தத் திருத்தம் கூறியது. ஏனென்றால், மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஒழுங்காகச் செயல்படுத்திய மாநிலம் இதனால் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

2001ல் இந்த 25 ஆண்டு காலம் முடிவுக்கு வந்தபோது, 2002ல் தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 84வது திருத்தத்தின் மூலம் இது மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப்போடப்பட்டது. இந்த 25 ஆண்டு 2026ல் முடிவுக்கு வருகிறது. அப்போது தொகுதிகள் மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

நிதி ஒதுக்கீட்டு, அதிகாரப் பகிர்வு போன்ற எல்லாமே மக்கள் தொகையின் அடிப்படையில்தான் இருக்கும் ஒரு நாட்டில், ஒரு பகுதியில் மட்டும் மக்கள் தொகை அதிகரிப்பது ஆரோக்கியமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லாது என்கிறார்கள் நிபுணர்கள்.




Comments

Popular posts from this blog

பொன்னியின் செல்வன் 2 வசூலுக்கு வரும் மிகப்பெரும் ஆபத்து🥺🎬

🎞️National awards winning Tamil movies 🎥🎬

How to write a screen play ✍️