முரளிதரன் '800':

 முரளிதரன் '800': விஜய் சேதுபதி முதல் இன்று வரையிலான சவால்களும் பட தயாரிப்பின் சமீபத்திய நிலையும்

பைலட் பிரேம்நாத், நங்கூரம், தீ, மோகனப் புன்னகை போன்ற இலங்கை - இந்திய கூட்டு தயாரிப்பில் உருவான சுமார் 10திற்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பட வரிசையில் 800 திரைப்படமும் இடம்பிடிக்கின்றது.

இலங்கையிலிருந்து உருவான பிரபல்யங்களுக்கு மத்தியில், இலங்கையின் விளையாட்டுத்துறையில் பாரிய சவால்களுக்கு மத்தியில் தனக்கென்று இடத்தை பிடித்து, வரலாற்றில் இடம்பிடித்தவர் முத்தையா முரளிதரன்.

1972ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி இலங்கையின் மலையக பகுதியான கண்டியில் பிறந்தார் முத்தையா முரளிதரன்.

பாடசாலை வாழ்க்கையில் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் காட்டிய முத்தையா முரளிதரன், கிரிக்கெட் கழக போட்டிகளில் விளையாடியதன் ஊடாக, 1992ம் ஆண்டு இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்தார்.

அன்று முதல் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த அவர், 2010ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்களை பெற்ற முதலாவது வீரர் என்ற பெருமையை முத்தையா முரளிதரன் பெற்றுக்கொண்டார்.

800 விக்கெட்களை பெற்று சாதனையை நிலைநாட்ட 8 விக்கெட்கள் மாத்திரமே எஞ்சியிருந்த நிலையில், முத்தையா முரளிதரன் அடுத்த போட்டியுடன் தான் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கையின் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முத்தையா முரளிதரனின் இறுதிப் டெஸ்ட் போட்டியில், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் 8 விக்கெட்களை பெற்று, 800 விக்கெட்களை பெற்ற உலக சாதனையை நிலைநாட்டி, வரலாற்றில் இடம்பிடித்தார்.

800 விக்கெட்களை பெற்ற வீரர் என்ற அடிப்படையிலேயே, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த திரைப்படம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவிக்கின்றது.

800 திரைப்படம் எதிர்கொண்ட சவால்கள்

இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் என அடையாளப்படுத்தப்பட்ட முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையிலான திரைப்படத்தை எடுக்க 2020ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.

இந்தி திரைப்படத்தில் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்திற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

எனினும், இந்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், அதற்கு எதிராக தமிழகத்தில் மாத்திரமன்றி, புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களிலும் பாரிய எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்தன.

ஈழப் போராட்டத்தின் போது, முத்தையா முரளிதரன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு பதிலாக, இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி, தமிழர்களை காட்டிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அவருக்கு எதிராக கடும் எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு வெளியான எதிர்ப்புக்கள் அந்த காலப் பகுதியில் உலக வாழ் தமிழர்கள் மத்தியில் பேசுப் பொருளாக மாறியது.

இதையடுத்து, 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி முத்தையா முரளிதரன் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

'என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சில தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு, இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கின்றேன்," என முத்தையா முரளிதரன் அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

''ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்துவிடவில்லை. அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும், இளம் கிரக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன். அதற்கு இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கின்றது. நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன்." என முத்தையா முரளிதரன் அன்று நம்பிக்கை வெளியிட்டார்.

800 திரைப்படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கடிதமொன்றை பதிவிட்டு, கூறிய நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அதற்கு 'நன்றி.. வணக்கம்" என பதிலளித்திருந்தார்.

இந்த அறிவிப்புடன், முத்தையா முரளிதரனின் 800 திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி அதிகாரபூர்வமாக விலகிக்கொண்டார்.

''நன்றி, வணக்கம் என்று டிவிட்டரில் போட்டிருக்கிறேன். அப்படியென்றால் எல்லாம் முடிந்து விட்டது. புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இனி இதில் பேச ஒன்றுமில்லை" என நடிகர் விஜய் சேதுபதி, பின்னரான சந்தர்ப்பமொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படத்தின் நாயகனாக மதுர் மித்துன் ஒப்பந்தமாகினார்.

அதனைத் தொடர்ந்து, படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு நடவடிக்கைகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதமடைந்து, 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி தொடங்குவதற்கான ஆயத்தங்களை படக்குழு செய்திருந்தது.

எனினும், பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பு நடவடிக்கைகள் தாமதமாகும் அபாயத்தை எதிர்நோக்கியது.

எரிபொருள் தட்டுப்பாடு, மின்சார விநியோக தடை, எரிவாயு இன்மை, போக்குவரத்து பிரச்னைகள் என பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்ட நிலையில், கொழும்பு காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பமானது

அந்த காலப் பகுதியிலேயே 800 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்களை கொழும்பில் ஆரம்பிக்க படக்குழு தயாராகியுள்ளது.

எனினும், போராட்டத்தினால் படப்பிடிப்புக்களை கைவிட ஒரு தருணத்தில் படக்குழு தயாராகியதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இறுதித் தருணத்தில் படப்பிடிப்புக்களை நிறுத்தாது, நெருக்கடிக்கு மத்தியிலும் படப் பிடிப்பு நடவடிக்கைகளை, திட்டமிட்ட தேதியில் படக்குழு ஆரம்பித்துள்ளது.

போக்குவரத்துக்கு எரிபொருள் கிடைக்காமையினால், தாம் வரிசைகளில் பல நாட்கள் காத்திருந்து தமது வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொண்டதாகவும், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக எதிர்நோக்கிய எரிவாயு தட்டுப்பாட்டிற்கும் மத்தியில் நூற்றுக்கணக்கான படக்குழுவினருக்கு உணவுகளை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றயதாகவும் இந்த படத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பு நிறுவனமான ஐங்கரன் மீடியா பிரைவிட் லிமிட்டட் நிறுவனம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் 17 நாட்களும், கண்டியில் 30 நாட்களும், காலியில் 10 நாட்களும் படப் பிடிப்புக்கள் நடத்தப்பட்டதுடன், பிரித்தானியாவிலும் படப்பிடிப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. அத்துடன், இந்தியாவின் கேரளா பகுதியிலும் படப்பிடிப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்களில் தாம் எதிர்நோக்கிய சாவல்கள் குறித்து, இலங்கை ஒருங்கிணைப்பு நிறுவனமான ஐங்கரன் மீடியா பிரைவிட் லிமிட்டட் நிறுவனத்தின் அதிகாரியும், நடிகருமான ஷியா உல் ஹசன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

''கடந்த ஏப்ரல் மாதம் நாடு இருந்த நிலைமையில், 15ம் தேதி ஒளிபதிவுகளை நிறுத்த திட்டமிட்டார்கள். ஏனென்றால், காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பித்து விட்டது. அதற்கு அருகாமையிலுள்ள வாகன தரிப்பிடத்தில் முதல் நாள் படப்பிடிப்பு. போராட்டத்திற்கும், படப்பிடிப்பு இடத்திற்கும் பெரியளவிலான தூரம் கிடையாது. பாரிய சவாலாக இருந்தது. இந்த சவாலை நானும், நிறுவனத்தின் தலைவர் கார்த்திக்கும் எடுத்தோம். பல சந்தர்ப்பங்களில் படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதனால், மீண்டும் படப்பிடிப்பை நிறுத்தாது நாம் சவால்களை எதிர்கொண்டு, படப்பிடிப்புக்களை நடத்த உதவினோம். மே 9ம் தேதி கண்டிக்கு போகின்றோம். கொழும்பில் வன்முறை ஏற்படுகின்றது. ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுகின்றது. அந்த ஊரடங்கிலும் படப்பிடிப்புக்களை தொடர்ந்தோம்;. பாதுகாப்பு அமைச்சு, திரைப்படக் கூட்டுதாபனம், போலீஸார், சுற்றுலாத்துறை அமைச்சு உள்ளிட்ட தரப்பினர் பாரிய உதவிகளை எமக்கு வழங்கினார்கள். கேஸ் பிரச்னை. இந்தியா கலைஞர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை உரிய வகையில் செய்;ய வேண்டும். அதனையும் சவால்களை எதிர்நோக்கி செய்தோம். டீசல், பெட்ரோல் பிரச்னைகள் காரணமாக போக்குவரத்து பிரச்னைகளை எதிர்நோக்கினோம். ஜெனரேட்டர் பயன்பாட்டிற்கு எரிபொருள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கினோம். ஐங்கரன் மீடியா நிறுவனம் சவால்களை எதிர்நோக்கி இந்த படப்பிடிப்பை இலங்கையில் செய்து முடித்தது" என ஷியா உல் ஹசன் குறிப்பிட்டார்.

மூவி ட்ரைன் மோசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபத்தியின் இயக்கத்தில் ஆர்.டி.ராஜ்சேகரின் ஒளிப்பதிவில், ஜிப்ரானின் இசையில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்திற்கு மதுர் மித்துன் ஒப்பந்தமாகினார். முத்தையா முரளிதரனின் மனைவியான மதிமலரின் கதாபாத்திரத்திற்கு மகிமா நம்பியார் நடித்துள்ளார்.

அத்துடன், மூத்த கலைஞர்களான நாசர், வடிவுகரசி, வேலு ராமமூர்த்தி, அருள்தாஸ், தீலிபன், முத்தையா முரளிதரனின் சிறு வயது கதாபாத்திரத்தில் ரித்து ராக்ஸ் உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்துள்ளனர்.

அதேவேளை, இலங்கை கலைஞர்களான கிங் ரத்ணம், ஷியா உல் ஹசன், சந்திரஹாசன், ஆதிலக்ஷ்மன், மிஷால் பெரேரா, ஹரேன் விஜேந்திரா, டாக்டர் அனுஷாந்தன் உள்ளிட்ட 60திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கலைஞர்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்;

திரைப்படத்தில் முழுமையான படிப்பிடிப்புக்கள் முடிவடைந்த நிலையில், தற்போது ஒலிபதிவு நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

800 திரைப்படத்தை இந்த ஆண்டு நடுப்பகுதியில் வெளியிடுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. படத்தை தென்னிந்தியாவின் பிரபல திரைப்பட வெளியிட்டு நிறுவனமொன்றுடன் இணைந்து வெளியிடுவதற்கு படக்குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் படத்தை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டு ஒலிபதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை சினிமாவில் புதிய மைல் கல்

இலங்கை சினிமாத்துறையானது, பெரும்பாலும் இந்திய சினிமாத்துறையை சார்ந்தே தமது படைப்புக்களை செய்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக இலங்கையில் எடுக்கப்படுகின்ற திரைப்படங்களில், பெரும்பாலும் சிங்கள திரைப்படங்களுக்கே அதிக செல்வாக்கு காணப்படுகின்றது. எனினும், தமிழ் சினிமாத்துறைக்கான வரவேற்பு பெரிதும் குறைவாக காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

எனினும், தென்னிந்திய தமிழ் சினிமாவின் தாக்கம், தமிழ் பேசும் சமூகத்தை மாத்திரமன்றி, சிங்கள சமூகத்தையும் இலங்கையில் தனது ஆளுகைக்கு உட்படுத்தியுள்ளது.

தென்னிந்திய திரைப்படங்கள் பல இலங்கையில் ஒளிபதிவு செய்யப்பட்டுள்ளன.

பைலட் பிரேம்நாத், நங்கூரம், தீ, காக்க காக்க உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் இலங்கையில் படமாக்கப்பட்டுள்ளன. எனினும், இலங்கை பிரபல்யம் ஒருவரின் சுயசரிதையை முதல் தடவையாக பதிவிடும் படமாக வரலாற்றில் இடம்பிடிக்கின்றது முத்தையா முரளிதரனின் 800 திரைப்படம்.





Comments

Popular posts from this blog

பொன்னியின் செல்வன் 2 வசூலுக்கு வரும் மிகப்பெரும் ஆபத்து🥺🎬

🎞️National awards winning Tamil movies 🎥🎬

How to write a screen play ✍️